தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வரும், வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து, அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, "அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் குக்கிராமங்களில் உள்ள மக்களின் தேவைகளைக் கூட அறிந்தவர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். தமிழ்நாட்டிலேயே துணை முதலமைச்சரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். மக்களைக் குழப்பித் தேர்தலில் வென்று விடலாம் என்ற ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. மக்களை ஏமாற்றுவதுதான் தி.மு.க.வின் வேலை. ஒரு முறை ஏமாந்தது போதும், மீண்டும் ஏமாற வேண்டாம். அ.தி.மு.க.விற்கு துரோகம் இழைத்தவர்களைத் தேர்தலில் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, நாட்டு மக்களுக்கு நன்மை செய்யாத கட்சி தி.மு.க. நன்றி மறந்த தங்கதமிழ்ச்செல்வனுக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஓ.பன்னீர்செல்வம். தேக்கம்பட்டியில் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு சட்டக் கல்லூரி கொண்டுவர அடித்தளமிட்டவர் ஓ.பி.எஸ்." என்றார்.