சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வமும் பண்ருட்டி ராமச்சந்திரனும் அவரை சந்தித்துள்ளனர். தொடர்ச்சியாக மாநாடுகளை நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டிருப்பதாகவும் மாநாட்டில் பங்கேற்க டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்க இந்த சந்திப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
டிடிவி மற்றும் சசிகலா உடன் இணைந்து பணியாற்ற தயார் என ஓபிஎஸ் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பெரிதாக வாக்கு வங்கி இல்லாததால் அங்குள்ள அதிமுக வாக்குகளை தன் பக்கம் இழுக்க முயற்சிகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்க இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் ஓபிஎஸ் - டிடிவி சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ''ஒரு பழமொழி சொல்லுவாங்க.. காய்ந்த கொல்லையில் குதிரைய மேய்ச்சா என்ன கழுதைய மேய்ச்சா என்ன. அதனால் ஒரு தாக்கமும் ஏற்படாது. பொதுவாகவே அவர்களுடைய சந்திப்பு என்பது கவுண்டமணி - செந்தில் நீண்ட காலம் சந்திக்காமல் ஒருநாள் சந்தித்தால் எப்படி இருக்குமோ, அதுமாதிரி தான் இருக்கும். ஓபிஎஸ்சுக்கும் சசிகலாவிற்கும் அதிமுகவில் இடம் இல்லை. ஓபிஎஸ் - டிடிவி சந்திப்பு இரண்டு அமாவாசைகள் ஒன்று சேர்வதாகும்'' என்றார்.