திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. சுயேச்சை மற்றும் சொந்த கட்சி கவுன்சிலர்களை தன்பக்கம் இழுத்து அதிமுக ஒன்றிய செயலாளர் யாகப்பன், ரெஜினா நாயகத்தை தலைவராக்கி, தான் துணைத் தலைவராகி ஆக்டிங் சேர்மனாக அமர்ந்து கொண்டார்.
தற்போது ஆட்சி மாறி, காட்சிகள் மாறத் தொடங்கி உள்ளது. அப்போதே தனது மனைவி லலிதாவைத் தலைவராக்க முயற்சி செய்த திமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன், தற்போது கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி மற்றும் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோரின் கண்ணசைவில் காய்களை நகர்த்த தொடங்கியுள்ளார்.
முதல் கட்டமாக ஒரு சுயேச்சை மற்றும் பாமக ஒன்றிய கவுன்சிலர்கள் திமுகவில் இணைக்கப்பட்டனர். 3 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவிற்கு ஆதரவளித்தனர். இதனால் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் சாதாரண கூட்டம்கூட போதிய கவுன்சிலர்கள் பங்கேற்காததால் ஒத்திவைக்கப்பட்டது. திமுகவோடு சேர்ந்து அதிமுக கவுன்சிலர்களின் கூட்டத்தைப் புறக்கணித்ததால் ஒரு தீர்மானம்கூட அதிமுக தலைவரால் நிறைவேற்ற முடியவில்லை.
தன்னிடம் காசு வாங்கிக்கொண்டு ஆதரவு தெரிவித்துவிட்டு தற்போது அணி மாறி இருக்கும் ஒன்றிய கவுன்சிலர்கள் மீது ஏக கடுப்பில் இருக்கும் அதிமுகவினர், அணி மாறிய ஒரு கவுன்சிலர் வீட்டுக்கு 30க்கும் மேற்பட்டோர் சென்று “காசு வாங்கிக் கொண்டு இப்படிச் செய்யலாமா” என வார்த்தைகளைக் கொட்ட, கடுப்பான அந்த கவுன்சிலர் கொடுத்த பணத்தை வந்தவர்களிடம் தந்துள்ளார். இதே பாணியில் மற்றொரு கவுன்சிலருக்கும் குடைச்சல் கொடுத்து உள்ளது அந்த அதிமுக குரூப். அந்த பெண் கவுன்சிலரின் கணவரோ, “இரண்டு வருடம் நான் கொடுத்த ஆதரவில் சம்பாதித்த பணத்தில் பங்கு கொடுங்கள். நீங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பி கொடுத்து விடுகிறேன்” என ஒரே போடாக போட்டுவிட அந்த அதிமுக குரூப் பின் வாங்கியுள்ளது.
தற்போது ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் 19 பேரில் 11 பேர் திமுக வசம் உள்ள நிலையில், மேலும் மூன்று கவுன்சிலர்கள் அணி மாற தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் முதன் முறையாக அதிமுக ஒன்றியக் குழு தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து யூனியன் சேர்மன் பதவியை திமுக கைப்பற்றும் அரசியல் ஆட்டம் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமியால் நிலக்கோட்டையில் தொடங்கப்பட்டுள்ளது.