அ.தி.மு.க.வில் இரண்டு தலைமை இருப்பதால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என இரு அணிகளாக நிர்வாகிகள் உள்ளனா். இதனால் வர இருக்கிற சட்டமன்றத் தோ்தலில் அ.தி.மு.க.வில் முதல்வா் வேட்பாளா் யார் என்ற கேள்வி அ.தி.மு.க.வினரிடம் மட்டுமல்ல அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியினரிடமும் எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் அமைச்சா் செல்லூா் ராஜீ தோ்தலுக்கு பிறகு எம்.எல்.ஏ.க்கள் ஓன்றுகூடி புதிய முதல்வரை தோ்ந்தெடுப்போம் எனக் கூறியது இ.பி.எஸ். ஆதரவாளா்கள் மட்டுமல்லாமல் அ.தி.மு.க.விலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனே செல்லூா் ராஜீக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சா் ராஜேந்திரபாலாஜி, எடப்பாடி பழனிசாமி தான் முதல்வா் வேட்பாளா் என அறிவித்தார்.
இதைத் தொடா்ந்து இன்று நாகா்கோவிலில் கரோனா நோயாளிகளுக்கு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நிரந்தர முதல்வரே எடப்பாடி பழனிச்சாமி தான். வருகிற சட்டமன்றத் தோ்தலில் அவரை முதல்வா் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி தான் அ.தி.மு.க. தோ்தலை சந்திக்க இருக்கிறது. இதில் எந்த மாற்றமோ எந்தக் கேள்விக்கோ இடமில்லை. இதற்குக் காரணம் எடப்பாடி பழனிசாமி சிறந்த நிர்வாக திறமை கொண்டவராக உள்ளார். அதேபோல் கரோனா ஒழிப்புப் பணியிலும் தனது சிறந்த நிர்வாகத்தையும் காட்டி வருகிறார் என்றார்.
இதேபோல் தான் அமைச்சா் உதயகுமாரும் எடப்பாடி பழனிசாமி முன்நிறுத்தி தான் அ.தி.மு.க. தோ்தலைச் சந்திக்க இருக்கிறது என்றார். இது ஓ.பி.எஸ். ஆதரவாளா்கள் மத்தியில் இவா்களின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.