Skip to main content

அ.தி.மு.க. - பா.ஜ.க. பேச்சு; வானதி சீனிவாசன் விளக்கம்!

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
ADMK BJP speech Explanation by Vanathi Srinivasan

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், ஜெயக்குமார், கே.பி. முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க. கதவுகள் திறந்தே உள்ளன. தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணி இருக்கிறதா என்று இனியும் கேள்வி கேட்க வேண்டாம். பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கெனவே அறிவித்து விட்டோம். இது குறித்து நான் ஏற்கெனவே பல முறை கூறிவிட்டேன். அ.தி.மு.க. முன்னனி தலைவர்களும் தெளிவுபடுத்திவிட்டனர். கடந்த 2023 செப்டம்பர் 25 ஆம் தேதி அன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது. உறுதியாக சொல்கிறோம் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் இல்லை, இல்லை’ எனத் தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (12.02.2024) தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இரண்டாவது நாளாக சட்டப்பேரவை நேற்று கூடியது. அப்போது சட்டபேரவையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணியும், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனும் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக சபை நடந்துகொண்டிருக்கும் போதே பேசிக்கொண்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தங்கமணியிடம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேசினீர்களா என வானதி சீனிவாசனிடம் செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “கூட்டணி குறித்து பேசுவதற்கு என்று ஒரு முறை இருக்கிறது. இதற்கென கட்சியில் ஒரு குழு இருக்கிறது.  கூட்டணி குறித்து சட்டப்பேரவையிலா பேச முடியும்?. கூட்டணி குறித்து பேசுவதற்கு என்று ஒரு இடம் இருக்கிறது. டீயில் சர்க்கரை அதிகம் இருக்கிறது என்று பேசினோம்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்