இந்திய ஜனநாயகக் கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் அதிமுகவும், பாஜகவும் தமிழகத்தில் மோதிக் கொள்கின்றன. சமீப காலமாக அதிமுக - தமிழக பாஜக இடையே வார்த்தைப் போர் நிலவி வருகிறது. சமீபத்தில் பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இதையடுத்து அண்ணா குறித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சி.வி. சண்முகம் போன்றவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இது தொடர்பாக மாறி மாறி இரு கட்சித் தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றே அறிவித்தார்.
இதனையடுத்து அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துவிட்டு வந்தனர். மேலும், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்ததாகவும், அந்தச் சந்திப்பில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை அந்தப் பதவியில் இருந்து நீக்கினாலேயே கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியும் என்றும், அண்ணாமலையை மாற்றும் கோரிக்கையில் இ.பி.எஸ். உறுதியாக இருப்பதாகவும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.க.வின் தலைவர் திருமாவளவன், “அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது தற்காலிகமான அரசியல் நாடகம். அவர்கள் ஒருபோதும் கூட்டணியை முறித்துக்கொள்ள மாட்டார்கள். அதிமுக - பா.ஜக. இரண்டு கட்சிகளுமே ஒன்றை ஒன்று நம்பியுள்ளன. இவர்கள் தனித்து நிற்பதற்கு வாய்ப்பில்லை. அண்ணாமலை கவன ஈர்ப்புக்காக கண்டதை பேசுகிறார். ஆதரமில்லாவற்றை எல்லாம் பேசுகிறார். பேரறிஞர் அண்ணாவை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுகிறார். இவை அனைத்தும் அரசியலில் தன்னைப் பற்றி தினமும் விவாதிக்க வேண்டும் என்ற உளவியல் சிக்கல் அவருக்கு இருக்கிறது” என்று தெரிவித்தார்.
நாளை அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ். தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.