திருச்சி எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் சிறுபான்மையினர் ஓட்டு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக கிறிஸ்தவர்கள் ஓட்டு என்பது பெரும்பான்மையாக பரவலாக திருச்சி மாநகர் முழுவதும் இருக்கிறது.
பிஜேபி ஆட்சியில் கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த அடிப்படையில் இந்த முறை கிறிஸ்தவர்கள் பிஜேபிக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் எதிராக வாக்களிக்க வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றி அதை அவர்களுக்குள்ளே பகிர்ந்தும் வருகிறார்கள்.
அதனால் தருமபுரியிலிருந்து அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் இளங்கோவனுக்கு சிறுபான்மையினர் ஓட்டு கிடைப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு என்பதை அவர்களே அறிந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் திருச்சி மாநகரில் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருப்பதால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் லோக்கல் பிரமுகர் அடைக்கலராஜ் மகன் ஜோசப்லூயிஸ் சீட்டு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று அனைத்து கிறிஸ்தவ நிறுவனங்களிலும், சபைகளிலும் ஜோசப்லூயிசுக்கு வாக்களிக்க முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் திருநாவுக்கரசருக்கு காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு கொடுத்ததால் கிறிஸ்தவர்கள் குழப்பமான நிலையில் இருக்கிறார்கள்.
காரணம் திருநாவுக்கரசர் பிஜேபியிலிருந்து அணி மாறி வந்தவர் என்பதாலும் டிடிவி பிஜேபி எதிர்ப்பு மனநிலையில் உறுதியாக இருப்பதாலும் அந்த கட்சியின் சார்பில் நிற்கும் சாருபால தொண்டைமான் லோக்கல் விஐபி என்பதாலும் அத்தோடு அமுமுக மாநகர செயலாளர் சீனிவாசன் கிறிஸ்தவ அமைப்புகளின் உள்ள முக்கியமானவர்களோடு நெருக்கமான தொடர்புகளில் இருப்பதால் முஸ்லீம் அமைப்பும் டிடிவிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் திருச்சியில் சிறுபான்மையினர் வாக்குகளை யார் அறுவடை செய்யப்போகிறார்கள் என்பது பெரிய விவாதமே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்று காலை திருச்சி ரோமன் கத்தோலிக்க ஆயர் தேவதாஸ் ஆம்புரோஸ் ஆயரை சந்தித்த அமுமுக மாநகர செயலாளர் சீனிவாசன் மற்றும் வேட்பாளர் சாருபாலா ஆகியோர் ஆசீர்வாதம் வாங்கி திரும்பும்போது திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு மற்றும் திருநாவுக்கரசர் உள்ளே நுழைந்தனர். அப்போது கே.என்.நேரு சிரித்துக்கொண்டே எதிரே நின்ற அமுமுக சீனிவாசனிடம் நம்ம இரண்டு பேருக்கும் பண்ணையடிக்கிறதே வேலையா இருக்கு என்றார் ஜாலியா சிரித்துக்கொண்டே.
தற்போதைய காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரும், முன்னாள் காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலாவுடன் பிரச்சாரம் எப்படி இருக்கு என்று இரண்டு வேட்பாளர்களும் நலம் விசாரித்துக்கொண்டிருந்தனர்.
வெளியே இரண்டு பேரும் சிரித்துக்கொண்டே இருந்தாலும் சிறுபான்மையினர் வாக்குகளை யார் பெறுவது என்பதில் பெரிய போட்டியே நடக்கிறது என்பது மட்டும் உண்மை!