கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி 224 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டன. நாளை தேர்தல் எனும் நிலையில், நேற்றுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது.
ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் பாஜகவும் மீண்டும் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டின. நாளை தேர்தல் என்பதால் கர்நாடகத்தில் அரசியல் களம் இன்னும் சூடாகவே உள்ளது. இந்நிலையில் தெரு விளக்குகளை அணைத்துவிட்டு வாக்காளர்களுக்கு பாஜக பணம் விநியோகம் செய்ததாகத் தற்போது பரபரப்பு கிளம்பியுள்ளது. குல்பர்கா சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள சங்மேஷ் காலனியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக நிர்வாகிகளை மாவட்ட ஆட்சியர் கைது செய்துள்ளார்.
பணம் கொடுக்கப்படுவதாகத் தகவல் கிடைத்ததும் காவல்துறையினருக்கு கூட தகவல் கொடுக்காமல் அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டபோது, மாவட்ட ஆட்சியரைக் கண்டதும் இரு கார்களில் பாஜகவினர் தப்ப முயன்றனர். ஒரு காரில் இருந்தவர்கள் தப்பிய நிலையில் மற்றொரு காரில் இருந்தவர்கள் பிடிபட்டனர். சிறை பிடிக்கப்பட்ட காரில் இருந்து நூற்றுக்கணக்கான மதுபாட்டில்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்களை கைது செய்தபோது எடுத்த வீடியோவை ஆதாரமாக தேர்தல் அதிகாரி யஸ்வந்த் சிங் வெளியிட்டுள்ளார். பாஜக வேட்பாளர் படத்துடன் கூடிய நோட்டீஸ் மற்றும் பணம் ஆகியவையும் கைதின் போது கைப்பற்றப்பட்டுள்ளது. தப்பி ஓடியவர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.