அண்மையில் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா விஜய்யை சந்தித்திருந்த நிலையில் அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி நேற்று (31-01-25) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விஜய்யை ஆதவ் அர்ஜுனா சந்தித்து கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கியப் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், அவருக்கு தமிழக வெற்றிக் கழக கட்சியின் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதே போல், அதிமுக நிர்வாகியாக இருந்த சி.டி.நிர்மல் குமார், அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். அவருக்கு, தகவல் தொழில்நுட்ப, சமூக ஊடகப் பிரிவின் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ள ஆதவ் அர்ஜுனா விசிக தலைவர் திருமாவளவனுடன் சந்திப்பு மேற்கொண்டார். இந்த சந்திப்பின்பொழுது ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தை அவருக்கு வழங்கியவர், திருமாவளவனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி அவரிடம் வாழ்த்து பெற்றார்.
அதனை தொடர்ந்து, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவும், திருமாவளவனும் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அண்ணன் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற வந்தேன். பெரியாரின் கொள்கையிலும், அம்பேத்கர் கொள்கையிலும், கொள்கை ரீதியான பயணத்தில் திருமாவளவனிடம் தான் மிகப்பெரிய கருத்துக்களை உள்வாங்கி கள அரசியலை கற்றுக்கொண்டேன். அந்த பயணத்தில் எந்த முடிவு எடுத்தாலும், அண்ணனுடன் கலந்துரையாடி அவருடைய ஆசிப்பெற்று என்னுடைய பயணத்தை மக்களுக்காக தொடங்குவேன் என்று சொல்லி இருந்தேன். அதன் வெளிப்பாடு தான் மரியாதை நிமித்தம் என்று சொல்வதை விட வாழ்த்து பெறுவதற்கும் ஆசி பெறுவதற்கும் நான் வந்திருக்கிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த பொறுப்பு, கொள்கை ரீதியாகவும் மக்களுக்கானதாகவும் என்னுடைய பணி எப்போதும் இருக்கும். அதற்கு அண்ணன் திருமாவளவன், வாழ்த்துக்களும் ஆசியும் நிறைய அறிவுரையும் கொடுத்திருக்கிறார். அதற்கு அண்ணனுக்கு நன்றி.
கொள்கைப்படி அரசியாலை உருவாக்குங்கள் என்று திருமாவளவன் எப்போதும் அறிவுரை கூறுவார். அதிகாரத்தை நோக்கிய பயணத்தை அரசியலை உருவாக்குங்கள் என்று இந்த சந்திப்பின் போது அவர் சொன்னார். பெரியார் கொள்கைபடி, அம்பேத்கர் கொள்கைபடி அவர் சொன்னது போல் என்னுடைய உயிர் மூச்சு உள்ளவரை என்னுடைய பயணம் இருக்கும். எங்களுக்கும், திருமாவளவனுக்கும் கொள்கை அளவில் எந்தவிதமான எதிரெதிர் துருவங்கள் கிடையாது. தவெகவும், விசிகவும் ஒரே கருத்துகளுடனும் ஒரே கொள்கையுடனும் தான் இருக்கிறோம். அதனால், நாங்கள் எதிரெதிர் துருவங்கள் இல்லை. ஒரே துருவத்தில் கொள்கை அடிப்படையில் பயணம் இருக்கும். கொள்கை அடிப்படையில் இப்போதும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்” என்று பேசினார்.
அதனை தொடர்ந்து பேசிய திருமாவளவன், “ஆதவ் அர்ஜுனா ஒரு புதிய அணுகுமுறையை தமிழக அரசியலை தொடங்கி வைத்திருக்கிறார். பொதுவாக ஒரு கட்சியில் இருந்து விலகினாலோ அல்லது விலக்கி வைத்தாலோ அதை பகையாக கருதுகிற பாரம்பரியம் தான் அரசியல் களத்தில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து விலகும் சூழ்நிலையில் கூட அதை பகையாக கருதவில்லை. வலிகள் இருந்தாலும் கூட அதை எதிராக கருதவில்லை. தான் இன்னொரு கட்சியில் போய் சேர்ந்து, பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்ற இந்த சூழலில், உங்களுடைய வாழ்த்தும் தேவை என்று என்னை தேடி வந்திருப்பது என்பது தமிழக அரசியல் கற்றுக்கொள்ள வேண்டிய நாகரிமாக நான் பார்க்கிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறினார்.