Skip to main content

நிலைமையை மாற்றும் 60 தொகுதிகள்..!  

Published on 02/05/2021 | Edited on 02/05/2021

 

60 Constituency that changed the situation ..!

 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

 

காலை 10.30 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 131 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 102 சட்டமன்றத் தொகுதிகளிலும், மநீம கூட்டணி 1 சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் இருந்தன.

 

பல இடங்களில் திமுக வெற்றிபெறும் என அக்கட்சியினர் உறுதியாக இருந்த நிலையில், அதிமுக மற்றும் பாஜக ஆகியவை மிகுந்த நெருக்கடியைக் கொடுத்துவருகிறது. அதேபோல் அதிமுக வெற்றிபெறும் என அக்கட்சியினர் எதிர்பார்த்திருந்த நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிகுந்த நெருக்கடியை தந்துவருகின்றன. குறிப்பாக, யாரும் எதிர்பாராதவிதமாக காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகனை தாண்டி அதிமுக வேட்பாளர் ராமு முன்னிலையில் இருக்கிறார். அதேபோல், கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 212 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியைவிட முன்னிலையில் இருக்கிறார். அரவக்குறிச்சி தொகுதியிலும் திமுக வேட்பாளர் இளங்கோ 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையைவிட முன்னிலையில் இருக்கிறார். இதுபோல் கிட்டத்தட்ட 50 முதல் 60 தொகுதிகள் வரை திமுகவும் அதிமுகவும் மிகுந்த நெருக்கடியை சந்தித்து வருகிறது. 

 

ஆனால், பிற்பகல் 3 மணி நிலவரத்தின்படி காட்பாடியில் துரைமுருகன் முன்னிலை பெற்று வருகிறார். தாராபுரத்தில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துவந்த திமுக வேட்பாளர் கயல்விழி, தற்போது பாஜக வேட்பாளர் எல்.முருகனை முந்திச் சென்றுக்கொண்டிருக்கிறார். 

 

இப்படி தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் நடந்துவரும் வாக்கு எண்ணிக்கைக்கு மத்தியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டு, வெற்றி சான்றிதழ் பெறும்வரை திமுக பிரமுகர்கள் யாரும் வாக்கு எண்ணும் மையங்களைவிட்டு வர வேண்டாம், காரணம் இறுதிக்கட்டத்திலும் நிலைமை மாறலாம்” என்று தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்