களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் மேடையில் பேசுகையில், ''கரடு முரடான பாதைகள்; எத்தனையோ போராட்டங்கள்;எத்தனையோ தியாகங்கள் செய்துள்ளோம். லட்சக்கணக்கான மக்கள் சிறைக்கு சென்று இருக்கின்றோம். நூற்றுக்கணக்கானவர்கள் தன் உயிரை நம் கட்சிக்காக; இயக்கத்திற்காக; தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக கொடுத்திருக்கிறார்கள். தியாகம் செய்திருக்கிறார்கள்.
இப்படி ஆயிரக்கணக்கான போராட்டங்களை செய்த கட்சி பாமக. ஆனால் இவ்வளவு காலமாக மக்கள் நம் மீது இன்னும் முழுமையாக நம்பிக்கை வைக்கவில்லை கடந்த காலத்தில். இப்பொழுது நம்பிக்கை வைக்கத் தொடங்கி விட்டார்கள். என்னுடைய நோக்கம் 2026ல் சட்டமன்ற தேர்தலில் பாமக உறுதியாக ஆட்சி அமைக்கும். அதற்கு ஒரு முன்னோட்டம் தான் 2024 ஆம் ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தல். 2024 நாடாளுமன்ற தேர்தல் செமி ஃபைனல் 2026 பேரவை தேர்தல் ஃபைனல். அதற்கு வேகமாக இங்க இருக்க கூடிய செயல் வீரர்கள் ஈடுபட வேண்டும். களப்பணியாளர்கள் என்று உங்களை சொல்ல மாட்டேன் ஏனென்றால் நீங்கள் எல்லாம் வீரர்கள். களத்தில் இறங்குங்கள். இந்த கட்சி; இந்த ஜாதி எல்லாத்தையும் என விட்டு விட்டு எல்லாரையும் போய் பாருங்கள். எல்லாரையும் அணுகுங்கள். பார்த்தீர்கள் என்றால் தான் அவர்களுக்கு ஒரு மன மாற்றம் வரும். நிச்சயமாக நமக்கு ஆதரவு கொடுப்பார்கள். நீங்கள்தான் அடுத்து ஆட்சிக்கு வர வேண்டும் என பலர் போகும் இடமெல்லாம் சொல்கிறார்கள். குறிப்பாக பெண்கள் அந்த மனநிலையில் இருக்கிறார்கள். அதற்கு ஏற்ப இங்கிருக்கும் செயல்வீரர்கள் நடந்து கொள்ள வேண்டும்'' என்றார்.