கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் வரும் 25ஆம் தேதி அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வருகை தர உள்ளதால் கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜ் தலைமையில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக், உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார் உட்பட ஏராளமான போலீசார் பொதுக்கூட்ட இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை செய்தனர். அப்போது கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் குறித்து முடிவு செய்யப்பட்டது. போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வாகனங்களை மாற்றுப் பாதையில் செலுத்துவது குறித்தும் ஆலோசித்தனர். இந்த ஆய்வின்போது அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் மணிராஜ், நகரச் செயலாளர் துரை ஆகியோர் உடனிருந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி உளுந்தூர்பேட்டை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதால் தற்போதே உளுந்தூர்பேட்டை பரபரப்பாகி உள்ளது.