‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கிற பிரச்சாரப் பயணத்தை தொடங்குகிறார் திமுக தலைவரான ஸ்டாலின். அந்தப் பிரச்சாரத்தின்போது, பொதுமக்கள் தங்களது குறைகளை, பிரச்சனைகளை மனுவாக அளிக்கலாம். ஆட்சிக்கு வந்ததும் அடுத்த 100 நாட்களில் அந்த குறைகள் தீர்க்கப்படும் என கோபாலபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். ஆட்சியில் அமர்ந்ததும் தனித்துறை உருவாக்கப்படும் என்றும் பொதுமக்களின் புகார்கள் உடனுக்குடன் தீர்க்கப்படும் என்றும், தற்போது தரப்படும் மனுக்கள் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தீர்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஜனவரி 29ஆம் தேதி திருவண்ணாமலையில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதற்காக 28ஆம் தேதி இரவு திருவண்ணாமலை வந்து தங்குகிறார் ஸ்டாலின். இதுதொடர்பாக திருவண்ணாமலை தெற்கு மா.செவான எ.வ.வேலு எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 29ஆம் தேதி ஸ்டாலினிடம் நேரடியாக மனுக்களைத் தரலாம் என அறிவித்துள்ளார்.
இத்தகவலை, அந்தந்த தொகுதியில் உள்ள கட்சியின் நிர்வாகிகள், மக்களிடம் கூறி, ஸ்டாலினிடம் நேரடியாக மனு அளிக்க விரும்புகிறவர்களை அழைத்து வர வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஜனவரி 29ஆம் தேதி, ஆரணி நகரிலும் இதேபோல் புகார் மனுக்கள் வாங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஆரணி, வந்தவாசி, போளுர், செய்யார் தொகுதி பொதுமக்கள் வந்து மனுக்கள் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 30ஆம் தேதி வேலூர், இராணிப்பேட்டை மாவட்டத்திலும், ஜனவரி 31ஆம் தேதி திருவள்ளுவர் மாவட்டத்திலும் ஸ்டாலின் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு, மனுக்களை வாங்குகிறார். அதன்பின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் மனுக்களை வாங்குகிறார் எனத் திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.