குமரித் தந்தை' என்று அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி்-ன் 55வது நினைவு நாளையொட்டி, நாகர்கோவில் வேப்பமூடு மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் மனோதங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தாய்த்தமிழ் இணைப்பு போராட்டம் என்பது வரலாற்று சிறப்புமிக்க போராட்டம். அந்த போராட்டத்தின் தந்தையாக இருந்து குமரியை தமிழ்நாட்டுடன் 1956ல் இணைத்த மாபெரும் பெருமைக்கு சொந்தக்காரர் மார்ஷல் நேசமணி. தமிழில் ஒரு பழமொழி சொல்லுவோம், உட்கார்ந்துவிட்டு காலை நீட்ட வேண்டும் என்று. பால்வளத்துறை அமைச்சராக இப்போது தான் பொறுப்பேற்றுள்ளேன். தொடர்ந்து ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறேன். சிலர் ஆவினில் உள்ள சில மிகச்சிறிய பலவீனங்களை மட்டும் பேசுகிறார்கள். நான் அமைச்சராக அதன் பலத்தை பற்றி பேச வேண்டும்.
ஆவின் என்பது வலுவான பொதுத்துறை நிறுவனம். பொதுத்துறை நிறுவனங்கள் பல்வேறு சவால்களை சந்திக்கும். அதுபோல் ஆவினுக்கும் சவால்கள் இருப்பது உண்மைதான். அந்த சவால்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் பேசி எடுக்கப்பட்ட முடிவுகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று அவரது கருத்துகளையும் பெற்று சில முன்னெடுப்புகளை எடுத்துள்ளோம். வெகுவிரைவில் ஆவின் அதன் அடிப்படை நோக்கமான, பால் உற்பத்தியாளர்களுக்கு போதிய விலை கொடுத்து பாலை வாங்குவது மற்றும் பொது மக்களுக்கு தரமான பாலை வழங்குவது என்ற இரு இலக்கையும் நிறைவேற்றும் விதத்தில் செயல்பட்டு வருகிறோம்.
ஆவின் நஷ்டத்தில் இயங்குகிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. சில சீசன்களில் சில பிரச்சனைகள் வரும். உண்மையாகவே பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3 உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. விற்பனையில் ரூ.3 முதலமைச்சர் குறைத்துள்ளார். இந்த 6 ரூபாய்க்கு உள்ள இடைவெளியில் சவால் உள்ளது. ஆனால் இதை நஷ்டமாக பார்க்காமல், செலவினங்களை எப்படிக் குறைப்பது, மூலதன செலவை எப்படி அதிகரிப்பது, மற்ற செலவுகளை எப்படி குறைப்பது என்பது போன்ற தீவிர ஆலோசனை நடைபெறுகிறது. அதன் முடிவில் நாங்கள் நல்ல திட்டங்களுடன் வர இருக்கிறோம்” என்றார்.