தற்போது இருப்பது போல் சமூக வலைதளங்கள், தொழில் நுட்பங்கள் இருந்திருந்தால் முன்பே தாம் முதலமைச்சர் ஆகி இருக்கக்கூடும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சரத்குமார் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்வில் பேசிய அவர், “15 ஆண்டுகளாக இந்த இயக்கம் நடந்து கொண்டு இருக்கிறது உங்களுக்கு தெரியும். 2007ல் துவங்கி 2022 வரை 15 ஆண்டுகள் ஆகிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்கள் கேட்கலாம். என்ன கட்சி நடத்தினார்கள். என்ன சாதித்தார்கள் என. 15 ஆண்டுகள் இந்த இயக்கம் நடந்து கொண்டு இருப்பதே மிகப்பெரிய சாதனைதான். எந்த ஒரு பெரிய பணபலமும் இல்லாமல் இந்த கட்சி நடந்து கொண்டு இருக்கிறது. காலதாமதமாகலாம் ஆனால் உறுதியாக சென்றடைய வேண்டிய இடத்திற்கு நிச்சயமாக செல்வோம். இந்த இயக்கத்தின் வெற்றி மக்களுக்கு நாம் செய்யும் சேவையில் இருக்கிறது.
பண அரசியல் போய் நிச்சயம் பணமில்லா அரசியல் வரும். யாரும் பணம் வைத்து வாக்குகளைப் பெற முடியாது என்ற நிலை வரும்போது நிச்சயம் சமத்துவ மக்கள் கட்சி வெற்றி பெறும். மக்களுக்கான சேவை மற்றும் தொண்டு செய்ய துவங்கிய காலத்தில் செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் இல்லை. இதெல்லாம் இருந்திருந்தால் அப்போதே முதல்வர் ஆகி இருப்பேன்” என்று கூறினார்.