Skip to main content

15 நிமிடத்திற்கு ஒரு வன்கொடுமை! - மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு கூட்டத்தில் விவாதிப்பு

Published on 26/06/2018 | Edited on 26/06/2018

 

vankodumai

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் சென்னையில் இன்று (26.06.2018) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத், அ.சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

 

தீர்மானம் - 1
கோவை மாநகர குடிநீர் விநியோகத்தை 
தனியாரிடம் தாரை வார்க்காதே!

தமிழக எடப்பாடி அரசு மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களை பறித்து வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தற்போது கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோகத்தை நாசமாக்கிடும் வகையில் அந்நிய தனியார் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியுள்ளது. 


பிரான்ஸ் நாட்டு தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு 3150 கோடி ரூபாய்க்கு 26 வருடங்களுக்கு இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை மாநகர மக்களின் உயிர்ப்பிரச்சனையான குடிநீர் தேவை தனியார் லாப வேட்டைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கு கட்டணத்தை நிர்ணயிப்பதில் எந்த உரிமையும் இல்லாத நிலையில் சந்தை நிலவரப்படி சூயஸ் நிறுவனமே இஷ்டப்படி கட்டணத்தை நிர்ணயித்து கொள்ளையடிக்கிற நிலை ஏற்படும். உள்ளாட்சி அதிகாரத்தை பறிக்கிற ஜனநாயக விரோதப் போக்கும் இதில் வெளிப்பட்டுள்ளது. பெரும் கொள்ளைக்கான ஒப்பந்தம் என்பதால் சூயஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை இந்தியாவின் மிகப்பெரிய குடிநீர் விநியோக ஒப்பந்தம் என்று பீற்றிக்கொள்கிறது. 


குடிநீர் சமமான முறையில் கோவை நகரின் லட்சக்கணக்கான மக்களுக்கு விநியோகிக்கப்படுகிற தற்போதைய நிலை ஒழிக்கப்பட்டு பணத்திற்கு ஏற்ற அளவு மட்டுமே மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும். பணம் செலுத்த முடியாதவர்களுக்கு குடிநீர் இணைப்பு நிறுத்தப்படும். ஆனால் இப்படிப்பட்ட நிலைமைகள் எதுவும் ஏற்படாதது என்று மாநகராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது. இது உண்மையென்றால் சூயஸ் நிறுவனத்தோடு போட்ட ஒப்பந்தம் சட்டமன்றம் அல்லது மக்களின் கருத்துக் கேட்பு கூட்டம் போன்ற எந்த நிலையிலும் ஏன் விவாதிக்கப்படவில்லை?. ஜனநாயக விரோதமாக மக்களின் வாழ்வாதாரம் தனியாரின் லாப வேட்டைக்கு குத்தகை விடப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். 


இதேபோன்று, பல நாடுகளில் குடிநீர் விநியோகத்தை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அனுமதித்து குடிநீர் விநியோகம் பெரும் வணிகமாக மாறிய பல அனுபவங்கள் உண்டு. அந்த இடங்களில் கொள்ளை லாபம் அடித்த கார்ப்பரேட் நிறுவனங்கள், பின்னர் மக்களை கடும் குடிநீர் பஞ்சத்திற்கு ஆளாக்கிய அவலமும்  உலகில் நடந்ததுண்டு. 


எனவே, உடனடியாக சூயஸ் நிறுவனத்தோடு போடப்பட்டுள்ள அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதோடு, அடிப்படை வாழ்வாதார தேவையான குடிநீர் விநியோகத்தை தனியார்மயமாக்கும் எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது என்பதை மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.


இந்த ஒப்பந்தம் குறித்து தகவல் பரிமாற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாநகராட்சி காவல்துறையிடம் அளித்த புகார் அடிப்படையில் சிலர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வருகிறன்றன. இதுபோன்ற அணுகுமுறை மக்களின் ஜனநாயகக் குரலை ஒடுக்குவதாக அமையும் என்று மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

 

தீர்மானம் - 2
ஜூலை 2 இரயில் மறியல் போராட்டத்தை 
வெற்றி பெறச்செய்வீர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

மனுதர்மத்தை தீவிரமாக செயல்படுத்தும் பாஜக அரசு பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டு காலத்தில் தலித்துகள் மீதான குற்றங்கள் 66 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது இன்றைய தேதியில் 15 நிமிடத்திற்கு ஒரு வன்கொடுமை நிகழ்த்தப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் தான்  பட்டியல் சாதியினர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை உச்சநீதிமன்றம் நீர்த்து போகச் செய்துள்ளது. இது மேலும்  வன்கொடுமைகளை  அதிகரிக்கச் செய்து, தலித் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை  ஏற்படுத்தும் என்பதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சமூக ஒடுக்குமுறையினை எதிர்த்து போராடும் அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.


உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்கிட உடனடியாக மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்திடவும், அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையில் இணைத்திடவும் வலியுறுத்தி எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், இடைப்பட்ட காலத்தில் ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்ற வற்புறுத்தி ஜூலை 2 அன்று ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என மேற்கண்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மறியல் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தத்தை அளித்திட முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.


இம்மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் பெரும்திரளாக பங்கேற்று வெற்றிபெறச் செய்திட வேண்டுமென மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது. 


தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் ஆதரவளித்து இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

 

தீர்மானம் - 3
பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு
விவசாயிகள், பத்திரிகையாளர் கைது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

பசுமைச்சாலை திட்டத்திற்கு நிலம் கொடுக்க விரும்பாத விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் இன்று (ஜூன் 26, 2018) காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அவரவர் வீடுகளில் கட்டியிருந்த கருப்பு கொடிகளை போலீசார் பெரும் எண்ணிக்கையில் திரண்டு அவர்களே அவிழ்த்துச் சென்றுள்ளனர். மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் பி. டில்லிபாபு அவர்களை செங்கம் காவல்துறையினர் எந்தவித காரணமும் சொல்லாமல் கைது செய்துள்ளனர். அதேபோல திருவண்ணாமலையில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற மாத்ருபூமி தொலைக்காட்சி நிருபர் அனுஜார்ஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்டவலம் கிளைச் செயலாளர் ஆனந்தன், தீக்கதிர் நிருபர் ராமதாஸ்,  உள்ளிட்ட ஐந்து பேரை திருவண்ணாமலை போலீசார் கைது செய்துள்ளனர்.  பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை, அமைதியாகவும், ஜனநாயக முறைப்படி தெரிவிப்பதை கூட அனுமதிக்க மாட்டோம் என்று சர்வாதிகார முறையில் தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை மிரட்டி பறிப்பதும், விவசாயிகளையும், விவசாய சங்க தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டு, பசுமை சாலையை அமைத்திட முயற்சிப்பது நிலம் கையகப்படுத்தும் சட்ட விதிகளுக்கு முரணானதாகும்.  


பொதுமக்களின் போராட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து பசுமை வழிச் சாலை திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

சார்ந்த செய்திகள்