பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் கடந்த 11/07/2022 அன்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில், "10% இட ஒதுக்கீடு இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பு, அரசியலமைப்பை மீறவில்லை. 50% உச்சவரம்பை மீறவில்லை. அனைவரும் இலக்குகளை அடையத் தேவையான கருவியாக இட ஒதுக்கீடு பயன்படுகிறது. எனவே, பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது சரியே" என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக திமுக மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், “இந்தத் தீர்ப்பால் 133 கோடி இந்திய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டில் பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோரை விலக்கி வைத்தது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இது பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோரைப் பாகுபடுத்திப் பார்க்கும் செயல். எனவே, இதில் மீண்டும் விசாரணை வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.