இமாச்சலப்பிரதேசத்தில் வரும் 12ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கட்சியான பாஜகவிற்கும் காங்கிரசிற்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இரு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக ஈடுபட்டுள்ளது. மேலும் நாளையுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுவதால் இரு கட்சிகளின் பிரச்சாரங்களும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இன்று இமாச்சல் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் அங்கு வந்தார். சாலை வழியாகப் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றார். சுஜான்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, “காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி பற்றிய செய்திகளே இல்லை. வெறும் சண்டைகள் மட்டும்தான் உள்ளன. மேலும் காங்கிரஸ் நாட்டில் இரண்டு இடங்களில்தான் ஆட்சி செய்து வருகிறது.
பாஜகவின் 11 தீர்மானங்கள் இந்த மாநிலத்தை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும். நமது நாட்டில் பெண்கள் சகோதரிகள் காங்கிரஸ் அரசாங்கத்தால் மிகவும் புறக்கணிக்கப்பட்டனர். பல ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சி செய்த துரோகம் மற்றும் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இமாச்சல் மக்கள்.
அனைத்து மாநில மக்களும் பாஜக மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். பாஜக பலவீனமாக இருந்தது எனக் கருதப்பட்ட பல இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றது. வீடு வீடாகக் கழிவறைக் கட்டியதும் பாஜக அரசுதான். மின்சார வசதி தண்ணீர் வசதி போன்றவற்றைச் செய்து கொடுத்ததும் பாஜக தான்” எனக் கூறினார்.