தனக்கு உணவு கொண்டு வந்தவர் இந்து மதத்தை சேர்ந்தவர் இல்லை என கூறி வாடிக்கையாளர் ஒருவர் தான் ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்த சம்பவம் நேற்று நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களை எழுப்பியது.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த அமித் சுக்லா என்ற நபர் செவ்வாய்கிழமை இரவு சோமாட்டோ செயலி மூலம் அருகிலுள்ள உணவகத்தில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவரது உணவு தயாரிக்கப்பட்டு, டெலிவரிக்காக ஒரு நபரிடம் தரப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர் ஒரு இந்து இல்லை என கூறி தனது ஆர்டரை வேறு டெலிவரி பாய் மூலம் அனுப்ப கோரியுள்ளார். ஆனால் அவ்வாறு மாற்ற முடியாது என சோமாட்டோ நிறுவனம் கூறிய நிலையில் தனது ஆர்டரை கேன்சல் செய்து, அதற்கான தொகையான 237 ரூபாயையும் செலுத்தியுள்ளார்.
பின்னர் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தும், அவரை கிண்டல் செய்தும் வந்த நிலையில், அவரின் அந்த பதிவிற்கு சோமாட்டோ நிறுவனம் பதிலும் அளித்தது. அதில், "உணவிற்கு மதம் கிடையாது, உணவு என்பதே ஒரு தனி மதம் தான்" என கூறியது. சோமாட்டோ நிறுவனத்தின் இந்த பதிலுக்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து அந்த ஆர்டரை எடுத்த சென்ற சோமாட்டோ ஊழியர் ஃபயாஸ் பேசியுள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
தனது ஆர்டர் கேன்சல் ஆனது ஏன் என்பது தெரியாமலேயே அவர் இரண்டு மணி நேரம் இருந்துள்ளார் அவர். அதன்பின் சமூகவலைத்தளங்களை பார்த்தபோது தான் அவருக்கு நடந்தது தெரிந்துள்ளது. பின்னர் இதுகுறித்து ஃபயாஸிடம் கேட்டபோது, " இந்த சம்பவம் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. எங்களால் என்ன செய்ய முடியும் சார், நாங்கள் எல்லாம் ஏழைகள். இந்த துன்பத்தை அனுபவித்து, அதனை பொறுத்துக்கொண்டுதான் போக வேண்டும் " எனத் தெரிவித்தார்.