நாடு முழுவதும் 17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. முதல் கட்டமாக நேற்று 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நேற்று நடைபெற்றது.
இதில் அதிகபட்சமாக திரிபுராவில் 81.8 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக பிஹாரில் 50 சதவீத வாக்குகளும் பதிவானது. நாடு முழுவதும் நேற்று பரபரப்பாக தேர்தல் நடைபெற்ற நிலையில் ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளின் மிரட்டலால் 2 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் உள்ள மலகன்கிரி பகுதி மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக கருதப்படுகிறது. மேலும் நாடாளுமன்றன்ற தேர்தலில் வாக்காளர்கள் பங்கேற்கக் கூடாது, புறக்கணிக்க வேண்டும் என மாவோயிஸ்ட்கள் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்திருந்தனர். இதனால் இந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது, எனினும் மக்கள் வாக்களிக்க அச்சப்பட்டனர். மல்கன்கிரியில் பல வாக்குச்சாவடிகளில் குறைவான அளவே வாக்கு பதிவான நிலையில், 2 வாக்குச்சாவடிகளில் ஒரே ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.