
புதுச்சேரி மேட்டுப்பாளையம், சண்முகாபுரம், வடக்கு பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 24). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு, இவரது நண்பர் சக்தி (20) என்பவருடன் தனது வீட்டில் மது குடித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இரவு 10.15 மணி அளவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள்களில் திடீரென்று ஒரு கும்பல் வந்து இறங்கி 2 நாட்டு வெடிகுண்டுகளை இவர்கள் மீது வீசியது. பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியே அதிர்ந்தது. இதைப் பயன்படுத்தி தப்பி ஓட விடாமல் பன்னீர்செல்வம், அவரது கூட்டாளி சக்தி ஆகியோரை அந்தக் கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டித் தள்ளியது.
இதில் அதிர்ந்து போன அக்கம் பக்கத்தினர் பன்னீர்செல்வம், சக்தி ஆகியோரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சக்திக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெடிகுண்டு வீசி, அரிவாள் கத்தியால் ரவுடிகள் மீதான கொலைவெறி தாக்குதல் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.