Skip to main content

இன்னும் எண்ணப்படாமல் இருக்கும் 70 லட்சம் வாக்குகள் - கதிகலங்கி நிற்கும் அரசியல் கட்சிகள்!

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

jkl

 

பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டன. இந்நிலையில், இந்தியாவே பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றது. 

 

243 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு, 55 மையங்களில் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்து ஆர்.ஜே.டி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது மதியத்தில் இருந்து பா.ஜ.க கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. இடையில் 100க்கும் கீழான தொகுதிகளில் மட்டும் முன்னிலையில் இருந்த ஆர்.ஜே.டி கூட்டணி, மாலையில் மீண்டும் சற்று முன்னேறி உள்ளது. இதுவரை 80 சதவீத வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளது. ஆர்.ஜே.டி கூட்டணி 112 இடங்களிலும், பா.ஜ.க கூட்டணி 124 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

 

தற்போதைய நிலையில், யார் ஆட்சியில் அமருவார்கள் என்பது கணிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. மீதியுள்ள வாக்குகள் முடிவையே மாற்றும் ஆற்றல் படைத்த வாக்குகள் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "கரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக வாக்கு எண்ணும் சுற்றுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வாக்கு எண்ணிக்கை பொறுமையாக நடைபெற்று வருகிறது. மொத்தம் பதிவான 4.10 கோடி வாக்குகளில், இதுவரை 3.40 கோடி வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. எனவே இன்னும் 70 லட்சம் வாக்குகள் எண்ணப்பட வேண்டியிருக்கிறது. இதனால், தேர்தல் முடிவு வெளியாகச் சற்று காலதாமதம் ஆகும்" என்று தெரிவித்துள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்