18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் நேற்று (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.\
இந்நிலையில், இன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாடாளுமன்றத்திற்கு வந்து உரையாற்றினார். இதற்கிடையில், நாடாளுமன்ற மக்களவையில் உள்ள செங்கோலை நீக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி ஆர்.கே.சவுத்ரி மக்களவை சபாநாயகருக்கு நேற்று (26-06-24) கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், ‘அரசியலமைப்பு ஜனநாயகத்தின் சின்னம். கடந்த ஆட்சியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது. செங்கோல் என்பது ராஜாவின் கம்பு என்று பொருள். சமஸ்தானத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு, நாடு சுதந்திரம் பெற்றது. நாடு ராஜாவால் நடத்தப்பட வேண்டுமா அல்லது அரசியலமைப்பால் நடத்தப்பட வேண்டுமா?. அரசியலமைப்பை காப்பாற்ற பாராளுமன்றத்தில் இருந்து செங்கோலை நீக்க வேண்டும் என்று கோருகிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.
அவரது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சமாஜ்வாதி கட்சியினரும், இந்தியா கூட்டணி கட்சிகளும், மக்களவையில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனை தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சி எம்.பி ஆர்.கே.சவுத்ரியின் அந்த கடிதத்திற்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான யோகி ஆதித்ய்நாத் செங்கோல் விவகாரம் குறித்து பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. ‘செங்கோல்’ பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் அறியாமையைக் காட்டுகிறது. ‘செங்கோல்’ இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்” என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.