இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2015-ஆம் ஆண்டுமுதல் ஜூன் 21-ஆம் தேதியில் சர்வதேச யோகா தினம் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகிற்கு இந்தியா கொடுத்த பரிசுக்கொடையாக யோகா கருதப்படுகிறது.
இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி மையத்தில் யோகா தின சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் கலந்துகொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அவர்களுடன் சேர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
அதைதொடர்ந்து யோகா தினம் குறித்து பேசிய மோடி, யோகா கலை உலக நாடுகளுக்கு இந்தியா கொடுத்த கொடைப்பரிசு என குறிப்பிட்டார். மேலும் மிக வேகமான மாற்றங்களை சந்திக்கும் இந்த காலகட்டத்தில் நம் மனம், உடல், ஆத்மா என அனைத்தையும் ஒன்றுசேர்த்து அமைதியை தருவதே யோகா. டேராடூனிலிருந்து டப்ளின் ,ஷாங்காயிலிருந்து சிக்காகோ வரை, ஜகார்த்தாவிலிருந்து ஜொகன்னஸ்பரக் வரை உலகம் முழுவதையும் ஒன்றிணைக்கும் சக்தியாக யோகா திகழ்கிறது. இது உலகிற்கு இந்தியா கொடுத்த பரிசு மற்றும் நல்வழ்விற்கான பார்ஸ்போர்ட் எனவும், தற்போது யோகாவை உலகமே ஆரத்தழுவியுள்ளது என்று குறிப்பிட்ட மோடி, நல்வாழ்வை தேடும் மக்கள் இயக்கமாக தற்போது யோகா தினம் உருவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.