கர்நாடகாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குவியலாக ஒரு குழிக்குள் தூக்கிவீசப்பட்டுப் புதைக்கப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்பட்ட நிலையில், இதனை முன்வைத்து மருத்துவ ஊழியர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார் அம்மாநில முதல்வர் எடியூரப்பா.
கர்நாடக மாநிலம் பல்லாரியில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை, குழி தோண்டி, துணியில் எடுத்து வந்து, தூக்கி வீசி புதைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையானது. ஒரே குழியில் 3, 4 உடல்கள் தாறுமாறாகத் தூக்கிப் போடப்பட்டு மூடப்பட்டன. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், பல்வேறு தரப்பினரும் இதற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா, "பல்லாரி மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை ஊழியர்கள் அடக்கம் செய்த விதம், மிகுந்த வேதனையை அளிக்கிறது. கரோனா நோயாளிகள் மற்றும் அதனால் மரணம் அடைகிறவர்களைக் கையாள்வதில் மருத்துவ ஊழியர்கள் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இறுதிச்சடங்கை உரிய மரியாதையுடன் மேற்கொள்வது அவசியம். நாம் அனைவரும் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மனிதநேயத்தை விடப் பெரிய பணி வேறு எதுவும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.