சமையல் கேஸ் சிலிண்டர் விலையை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில் மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மேலும் 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாகவே சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், தேர்தல் காரணத்திற்காக விலை குறைக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.