மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் 36வது நாளாக தொடர்ந்து வருகிறது. நேற்று விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை, திருப்தியளிக்கும் வகையில் இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி கேரள சட்டசபையில் அம்மாநில அரசு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், விவசாயிகளின் நியாமான கவலைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், "விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தால், அது கேரளாவைக் கடுமையாக பாதிக்கும் என்பதை தற்போதைய நிலைமை தெளிவாக கூறுகிறது. பிற மாநிலங்களிலிருந்து உணவு பொருட்கள் வருவது நிறுத்தப்பட்டால், கேரளா பட்டினியால் வாடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என குறிப்பிட்டார்.
ஏற்கனவே வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மாநில அரசும், தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.