ராகுல் காந்தி கூறிய "ரேப் இன் இந்தியா" விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், டெல்லியில் "பாரதத்தை காப்போம்" என்ற கோஷத்துடன் பிரம்மாண்ட கூட்டம் ஒன்றை காங்கிரஸ் கட்சி நடத்தியது.
இதில் பேசிய பிரியங்கா காந்தி, "நாட்டில் தற்போதுள்ள சூழலுக்கு எதிராக ஒவ்வொருவரும் இணைந்து துணிச்சலுடன் போராட வேண்டும். நீங்கள் இந்தியாவை விரும்புவாராக இருந்தால், தயவுசெய்து உங்களின் குரலை உயர்த்துங்கள். உங்களின் இன்றைய மௌனம், நாளை நம்முடைய புரட்சிகரமான அரசியலமைப்புச் சட்டம் அழிக்கப்பட காரணமாகலாம். பாஜக ஆட்சியில் உண்மை என்னவென்றால், வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்றாலும் அவர்களால்தான், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்ததும் அவர்களால்தான், 4 கோடி வேலைவாய்ப்புகள் அழிந்ததும் அவர்களால் தான்.
உன்னாவ் நகரில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு சென்றபோது, அந்த பெண்ணின் தந்தை, அவரின் உள்ளங்கைக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு அழுதார். அதனை பார்க்கையில், என் தந்தை தற்கொலைப்படை தாக்குதலில் உடல் குலைந்து ரத்தமும், சதையுமாக மண்ணில் முகத்தைப் புதைத்து விழுந்து கிடந்தது என் நினைவுக்கு வந்தது. இன்றைய நிலையில், தொடர்ச்சியாக அநீதிகள் நடக்கின்றன. விவசாயிகள் துன்பத்தில் இருக்கிறார்கள். ஏழைகள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், பணக்காரர்களின் கஜானாக்கள் நிரம்புகின்றன" என பேசினார்.