18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.
இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.