Skip to main content

இந்தியாவில் போலி கோவிஷீல்ட் தடுப்பூசி - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

world health organization

 

இந்தியாவில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது. இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு செலுத்தப்பட்டதில் பெரும்பான்மையானவை கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளின் டோஸ்களாகும்.

 

இந்தநிலையில், ஜூலை - ஆகஸ்ட்  மாதங்களில் இந்தியா மற்றும் உகாண்டாவில் போலி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அவ்வாறு கண்டறியப்பட்ட தடுப்பூசிகள் போலியானவை என கோவிஷீல்டை தயாரிக்கும் சீரம் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

 

இதனைத்தொடர்ந்து, மருத்துவமனைகள், கிளினிக்குகள், சுகாதார மையங்கள், மொத்த விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்தவும், நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் இடையேயான விநியோகச் சங்கிலி மீதான கண்காணிப்பை அதிகப்படுத்தவும் உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.

 

"போலியான கரோனா தடுப்பூசிகள், உலகளாவிய பொது சுகாதாரத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீதும், சுகாதார அமைப்புகளின் மீதும் கூடுதல் சுமையை ஏற்படுத்துகின்றன. நோயாளிகளுக்குத் தீங்கு விளைவிப்பதைத் தடுக்க இந்தப் போலியான தடுப்பூசிகளைக் கண்டறிந்து புழக்கத்திலிருந்து அகற்றுவது அவசியம்" என இந்தப் போலி தடுப்பூசிகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை அடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க நம்மிடம் வலுவான அமைப்பு இருக்கிறது. இருப்பினும் இந்தச் செய்தியைத் தொடர்ந்து, இந்தியர்கள் யாரும் போலியான தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை என்பதை உறுதிசெய்ய விரும்புகிறோம். விநியோகச் சங்கிலிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. இந்தியாவில் எந்தப் பகுதியிலிருந்தும் எங்களுக்கு இதுவரை போலி தடுப்பூசி தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை. நாங்கள் இந்த விவகாரத்தை விசாரித்துவருகிறோம்" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்