நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், "நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 29 ஆம் தேதி வரை 23 நாட்கள் நடைபெறும். இதில், 17 அமர்வுகள் இடம்பெறும். ஆக்கப்பூர்வமான விவாதத்தை எதிர்நோக்குகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மாநிலங்களவைத் தலைவராக அவை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முதல் அமர்வு இதுவாகும். இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், தேசத்துரோக சட்டத்திருத்தம் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழைக்காலக் கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு குறித்து எழுப்பிய கேள்விக்கு அரசு தாமதமாக பதிலளித்ததால் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.