கட்சியின் தேர்தல் ஆணைய பதிவிற்காக நேற்று டெல்லி சென்ற மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து அதிகாரிகளின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் தமிழக பிரச்சனைகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதன்பின் நேற்று மாலை இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். ராகுல் காந்தியின் வீட்டிலேயே நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழக அரசியல் சூழல் குறித்து இருவரும் கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து இந்திய காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கமல்ஹாசனை சந்தித்தது மகிழ்ச்சியை தருகிறது. இந்த சந்திப்பில் தங்கள் இரு கட்சிகள் பற்றிய பரவலான விவாதங்கள் பற்றியும், தமிழக அரசியல் சூழ்நிலைகளை பற்றியும் விவாதித்தோம் என கூறியிருந்தார். ஏற்கனவே ராகுல் மற்றும் கமல் கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவிலே சந்தித்து கொண்டனர் என்பது குறிப்பித்தக்கது.
அதேபோல் தற்போது இன்று காலை சோனியா காந்தியையும் சந்தித்தார். சோனியா காந்தியுடனான இந்த சந்திப்பு முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன் பேசுகையில் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. தமிழக அரசியல் சூழல் பற்றி பேசினோம். நேரம் வரும்பொழுது கூட்டணி குறித்து பேசுவோம். நேற்று ராகுல் காந்தி இன்று சோனியா காந்தி என இருவரையும் சந்தித்தது மகிழ்ச்சியை தருகிறது என கூறினார்.