![What are the procedures for selecting vehicles? republic day in delhi](http://image.nakkheeran.in/cdn/farfuture/YuDB_GntE1tNw1g3ibHE8QvXUQ_PdFzqs3ADFWA6t5c/1642432973/sites/default/files/inline-images/tn333%20%281%29.jpg)
குடியரசுத் தின அணி வகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி நிராகரித்தது போலவே, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அணி வகுப்பு ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. எந்த அடிப்படையில் இந்த ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது? ஊர்திகளைத் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
குடியரசுத் தின அணி வகுப்பிற்காக மத்திய அரசின் முக்கியமான துறைகள் மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள குழு மூலம் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ஊர்திகளில் பயன்படுத்தப்படும் கருப்பொருள், கலைவடிவம், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்ப்டையாகக் கொண்டு, இவை தேர்ந்தெடுக்கப்படும். கடந்த ஆண்டு 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசின் 24 துறைகளும் விண்ணப்பித்திருந்த நிலையில், 22 அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு 12 மாநிலங்களுக்கும், சில மத்திய அமைச்சரவைத் துறைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப், கர்நாடகா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அனுமதி பெற்றுவிட்ட நிலையில், அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களின் ஊர்திகள் இறுதிக் கட்ட பரிசீலனையில் உள்ளன.
கடந்த ஆண்டு கேரளா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் விடுப்பட்டுப் போயிருந்த நிலையில், இந்த ஆண்டும் கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கேரளாவைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு அவர்களின் அலங்கார ஊர்தியில் சமூக போராளியான ஸ்ரீ நாராயண குருவின் உருவம் பிரதானமாக இடம்பெற்றிருந்தது. இதன் காரணமாகவே, அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்ட நிலையில், தனது கண்டனத்தைப் பதிவு செய்த கேரள அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் சுபாஸ் சந்திரபோஸின் 125- வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ஊர்தியை வடிவமைத்து இருந்த நிலையில், அதுவும் நிராகரிக்கப்பட்டது. ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவங்களும் ஊர்தியில் இடம் பெற்றிருந்தனர். இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.