நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. 6 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வரும் மே 19 ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தின் சில தொகுதிகளில் வரும் மே 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே பிரச்சாரத்திற்காக மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு பாஜக திட்டமிட்டது. ஆனால் பாதுகாப்பு காரணத்திற்காக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்க மேற்குவங்க அரசு மறுத்துவிட்டது.
மேலும் அமித் ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதா தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்க இருந்த கூட்டங்களுக்கும் இதே காரணங்களால் மேற்குவங்க அரசு அனுமதி மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவுகள் நெருங்கும் இந்த நிலையில் பாஜக மம்தா இடையிலான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.