மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன் சிங். கடந்த 2019ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவர், பாராக்பூர் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையில், ஜகதடல் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று (08.09.2021) காலை 6 - 6.30 மணியளவில் மூன்று குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. குண்டுவீச்சின்போது அர்ஜுன் சிங் வீட்டில் இல்லை. அவர் தற்போது டெல்லியில் உள்ளார். அர்ஜுன் சிங்கின் குடும்பத்தினர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த குண்டுவீச்சில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. வீட்டின் இரும்பு கதவு மட்டும் சேதமடைந்துள்ளது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
அர்ஜுன் சிங் வீட்டில் குண்டுகளை வீசியது அநேகமாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என மேற்கு வங்க பாஜக தலைவர் கூறியுள்ளார். திரிணாமூல் காங்கிரஸோ, பாஜகவில் நடைபெறும் உட்கட்சி மோதல் காரணமாகத்தான் அர்ஜுன் சிங் வீட்டில் குண்டு வீசப்பட்டதாக கூறியுள்ளது.
இதற்கிடையே அர்ஜுன் சிங் வீட்டில் குண்டு வீசப்பட்ட சம்பவம், சட்டம் ஒழுங்கு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மேற்கு வங்க ஆளுநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மேற்கு வங்கத்தில் வன்முறை குறைவதற்கான அறிகுறி தெரியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன் சிங்கின் வீட்டிற்கு வெளியே இன்று காலை வெடிகுண்டு வெடித்த சம்பவம் சட்டம், ஒழுங்கு குறித்து கவலையளிக்கிறது. இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன். அர்ஜுன் சிங்கின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தை மம்தாவிடம் எழுப்பியுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.