கரோனா வைரஸ் ஒழிந்துவிட்டதாகவும், ஆனால் பா.ஜ.க.வின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தங்களது கட்சி கூட்டங்களுக்கு அனுமதி வழங்கவில்லை எனவும் அம்மாநில பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 45,62,415 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 76,271 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கரோனா வைரஸ் ஒழிந்துவிட்டதாகவும், ஆனால் பா.ஜ.க.வின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தங்களது கட்சி கூட்டங்களுக்கு அனுமதி வழங்கவில்லை எனவும் அம்மாநில பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
ஹூக்ளி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திலீப் கோஷ், “கரோனா வைரஸ் ஒழிந்துவிட்டது, கரோனா வைரஸ் போய்விட்டது. ஆனால், பா.ஜ.கவின் வளர்ச்சியை மாநிலத்தில் தடுக்கும் நோக்கில், பேரணிகளை நடத்தவிடாமல் மம்தா பானர்ஜி ஊரடங்கு விதிக்கிறார். இந்த மாநிலத்தில் உள்ள பெரும்பகுதி மக்கள் பா.ஜ.கவை நம்புகிறார்கள், 2019 -ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.கவை முடித்துவிடலாம் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் எண்ணினர். 2021-ஆம் ஆண்டு மேற்குவங்கத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வோம்” என்று கூறினார்.