மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பாஜகவினருக்கும் , திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் அமித்ஷாவின் பேரணிக்கு கருப்பு கொடி காட்டியும் , அமித்ஷா திரும்பிப்போ என்ற பதாகைகளை ஏந்தியும் போராட்டம் நடத்தினர். பாஜக பேரணி பல்கலைக்கழக விடுதியை நெருங்கிய போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் பேரணி மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவினரும் அவர்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்தில் உள்ள ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலை சேதமாகியுள்ளது. அதே போல் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமித்ஷா திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் என்னை தாக்க முயன்றனர் என்றும் , மம்தா பானர்ஜி வன்முறையை தூண்டிவிடுகிறார். அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மம்தா அவர்கள் கூறுகையில் அமித்ஷா என்ன அனைத்திற்கும் மேலானவரா. தன்னை பற்றி அவர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார், தனக்கு எதிராக யாரும் போராடக்கூடாது என்ற அளவுக்கு மேலானவரா என்று அமித்ஷாவை சரமாரியாக விமர்சித்தார். கொல்கத்தாவில் நேற்று நடந்த வன்முறை தொடர்பாக பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளனர்.