நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் நானும் திருச்சி சிவா எம்.பியும் கலந்து கொண்டோம். திமுக சார்பில் தமிழ்நாடு நலன் குறித்து என்னென்ன பிரச்சினைகள் எழுப்ப இருக்கிறோம் என்பது குறித்து விரிவாக இந்த அவையிலே சற்றுமுன் விளக்கமாக கூறியிருக்கிறோம்.
அரசாங்கத்தின் சார்பில் ஏறத்தாழ 31 பிரச்சனைகள் விவாதிக்கப்பட இருக்கிறது. 29 சட்டங்கள், இரண்டு பைனான்சியல் பிசினஸ் உட்பட 31 விவாதங்களை எடுத்துக் கொள்ள இருக்கிறார்கள். ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் 19 நாட்கள்தான் நடக்கப் போகிறது. இந்த 19 நாளில் 29 சட்ட வரைவுகளை எப்படி முடிவுக்கு கொண்டு வருவீர்கள். இதற்கு காலம் இடம் தராது. பாராளுமன்ற உறுப்பினர்களுடைய நேரத்தை நீங்கள் குறைக்கிறீர்கள். எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச சரியான நேரம் கொடுப்பதில்லை போன்றவை திமுக சார்பில் எடுத்து வைக்கப்பட்டது.
அதேபோல் தமிழ்நாட்டு நலன் குறித்து பேசும்போது, மேகதாது திட்டத்திற்கு நீங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம் என்று சொல்கிறீர்கள். ஆனால் டிஆர்பி எனும் திட்ட மதிப்பீட்டுக்கு எப்படி அப்ரூவல் அளித்தார்கள். உங்களுக்கு வேற வேலை கிடையாதா? நீங்கள் டிஆர்பி எனும் திட்ட மதிப்பீட்டுக்கு அனுமதி கொடுத்துவிட்டு அணைகட்ட அனுமதி தரமாட்டேன் என சொன்னால் யார் நம்புவார்கள். எங்கள் அமைச்சர்களிடம் ஒன்றை சொல்லி அனுப்புகிறீர்கள். கர்நாடக முதலமைச்சர் வந்தால் நீங்கள் வேறொன்று சொல்கிறீர்கள். எங்கள் நீர்வளத்துறை அமைச்சர் வந்தால் அவரிடம் ஒரு மாதிரி பேசுகிறீர்கள். நாங்க நம்பமுடியாது. நீங்கள் பாராளுமன்றத்தில் சொல்லுங்கள். இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நீட்டுக்கு விலக்கு அளிப்பது, மேகதாது அணை விவகாரம், மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு ரிசர்வேஷன் உட்பட மூன்று தீர்மானத்தை கொடுத்திருக்கிறோம்'' என்றார்.