காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். கடந்த செப்.7 ஆம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமைக்கான நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்தப் பயணத்தை 150 நாட்களுக்கு மேற்கொள்ளும் ராகுல் காந்தி, சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் பாத யாத்திரையின் 100 வது நாளை நிறைவு செய்தார்.
இந்நிலையில், ராகுல் காந்திக்கும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்க்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் ஒன்றை எழுதினார். அதில், "இந்திய ஒற்றுமை யாத்திரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்ற இயலாவிட்டால் இந்திய ஒற்றுமை யாத்திரையை பொதுநலன் கருதி நிறுத்திக் கொள்ள வேண்டும்" என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், "ராகுல் காந்தியின் ஒற்றுமை பயண யாத்திரைக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருவதை கண்டு பாஜக பயந்து விட்டது. இந்த யாத்திரையில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். மத்திய அமைச்சர்கள் இப்படி கடிதம் எழுதுவது மத்திய அரசு மிகவும் பயந்து விட்டது என்பதைக் காட்டுகிறது. எங்கள் யாத்திரை தொடர்ந்து நடைபெற்று கொண்டுள்ளது. இந்த ஒற்றுமை யாத்திரையை சீர்குலைக்கவே மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இவ்வாறு கடிதம் எழுதுகிறார். நாட்டில் இந்திய ஒற்றுமை பயணத்தின் தாக்கம் மக்களிடத்தில் உள்ளதால் பாஜகவே கலக்கத்தில் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஜே.பி.நட்டாவின் ஆக்ரோஷ் பேரணி கடுமையான தோல்வியை சந்தித்தது. திரிபுராவில் பிரதமர் மோடி நடத்திய பேரணியில் கொரோனா நடைமுறைகளைப் பின்பற்றவில்லை" என்றார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, “இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பு ராகுல் காந்திக்கு ஒருபோதும் கிடைக்காது. 2024 தேர்தலில் நாங்கள் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், ராகுல் காந்தி எப்படி பிரதமராக முடியும்?.
2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களுக்கு மேல் பெறாது. ராகுல் காந்தி நடைப்பயணம் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? நாங்கள் சிறிதும் பயப்படவில்லை. நரேந்திர மோடி நமது வலிமையான பிரதமர். அவரது தலைமையில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது, வளர்ச்சியின் திசையில் செல்கிறது, நாங்கள் பயப்பட ஒன்றுமில்லை. காங்கிரஸ் கட்சிதான் பயத்தில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.