டெல்லியின் காஜியாபாத் பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 17 வீடுகளை வாங்க ரூ.1.98 கோடி ரூபாயை 17 பேர் முன்பணமாக செலுத்தியுள்ளனர். ஆனால் வீடு கட்டும் பணி தொடங்கப்படவில்லை, எனவே, இதில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் இயக்குநராகவும், விளம்பர தூதராகவும் உள்ள கவுதம் கம்பீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட 17 பேரும் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், கவுதம் கம்பீருக்கு நேரில் ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியிருந்தது.ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. இறுதியாக கவுதம் கம்பீருக்கு புதன்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபொழுதும் கவுதம் கம்பீர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, கவுதம் கம்பீருக்கு எதிராக ரூ.10,000 தொகையில் பிணையுடன் வெளிவரக் கூடிய வாரண்ட் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி மாதம் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.