உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று(19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில் கேரளாவில் மூதாட்டி ஒருவரின் வாக்கைப் பெறுவதற்காக வாக்கு இயந்திரம் வீட்டுக்கே கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது வெள்ளிக் கோத்து கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் குப்பச்சி அம்மா(111 வயது) தள்ளாடும் வயதில் தன்னுடைய வாக்கைச் செலுத்த முடியாமல் குப்பச்சி அம்மா தவித்து வந்தார். இதனால் அவருடைய வாக்கைப் பதிவு செய்வதற்காக தேர்தல் அலுவலர்கள் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்திருந்தனர்.
அதன்படி காஞ்சங்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளராக உள்ள குப்பச்சி அம்மாவின் வீட்டுக்கே தேர்தல் அலுவலர்கள் வாக்கு இயந்திரத்தை எடுத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் தலைமையில் வீட்டுக்குள்ளேயே தற்காலிகமாக வாக்குச்சாவடி மையம் அமைத்து அவருடைய வாக்கை பதிவு செய்தனர். குப்பச்சி அம்மா தன்னுடைய வாக்கை பதிவு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் அவருக்கு மலர் கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கினார்.