மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி, காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால், மேற்கு வங்கத்தில் மட்டும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார்.
அதன்படி, வரவிருக்கிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும், அங்குள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கட்சி வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்தார். இது காங்கிரஸ் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ஆதிர் ரஞ்சன் செளத்திரி ஆகியோர் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.
இதற்கிடையே, முதல்வர் மம்தா பானர்ஜி, தனது சகோதரரின் உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஹவுரா தொகுதியின் வேட்பாளராக சிட்டிங் எம்.பியான பிரசுன் பானர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார். ஹவுரா தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற பிரசுன் பானர்ஜிக்கு நான்காவது முறையாக வாய்ப்பு வழங்கியதற்கு மம்தா பானர்ஜியின் சகோதரர் பாபுன் பானர்ஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
இது குறித்து பாபுன் பானர்ஜி கூறுகையில், “ஹவுரா வேட்பாளர் தேர்வில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. பல திறமையான வேட்பாளர்கள் இருந்தும், பிரசுன் பானர்ஜியை தேர்வு செய்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த விஷயத்தில் மம்தா பானர்ஜி என்னுடன் உடன்படமாட்டார். ஆனால், தேவைப்பட்டால், ஹவுரா தொகுதியில் நான் சுயேட்சையாக போட்டியிடுவேன்” என்று தெரிவித்தார்.
பாபுன் பானர்ஜி பேட்டியளித்த, அடுத்த சில மணி நேரத்திலேயே மம்தா பானர்ஜி, தனது சகோதரரின் உறவை முறித்துக் கொள்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், “ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் பாபுன் பானர்ஜி ஏதாவது ஒரு பிரச்சனையை உருவாக்குகிறார். பேராசை பிடித்தவர்களையும் பிடிக்காது. வாரிசு அரசியலிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. அவருடைய பல செயல்பாடுகளை நான் ஏற்கவில்லை. எனவே, பாபுன் பானர்ஜியுடனான அனைத்து உறவையும் முறித்துக் கொள்கிறேன். எனது குடும்பமும் நானும், பாபுன் பானர்ஜி உடனான உறவை துண்டித்துக் கொள்கிறோம்” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.