Skip to main content

விஸ்மயா வழக்கு- கணவர் குற்றவாளி எனத் தீர்ப்பு! 

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

vishmaya case kollam district court judgement

 

வரதட்சணைக் கொடுமை காரணமாக, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் கணவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

 

கடந்த 2021- ஆம் ஆண்டு ஜூன் மாதம், கேரளாவைச் சேர்ந்த 22 வயது ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயா, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், வரதட்சணைக் கேட்டுத் துன்புறுத்துவதாகவும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதன் பிறகு, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலில் காயங்கள் இருந்ததும், அவரது தந்தைக்கு அவர் பேசிய ஆடியோ உள்ளிட்டவையெல்லாம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், விஸ்மயா தற்கொலைக்கு பிறகு கேரளாவில் பெரிய அளவில் வரதட்சணைக்கு எதிரான பிரச்சாரங்களை திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் மேற்கொண்டனர். 

 

விஸ்மயா தற்கொலை தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த கேரள காவல்துறையினர், விஸ்மயாவின் கணவரான கிரண்குமார் என்பவரை கைது செய்தனர். எனினும், அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

 

இந்த நிலையில், இது தொடர்பான, வழக்கு விசாரணை கொல்லம் மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. உயிரிழந்த இளம்பெண் விஸ்மயாவின் குடும்பத்தினர், தொடர்ந்து சட்டப்போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். 

 

அதன் பலனாக, வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதில், விஸ்மயாவின் கணவர் கிரண்குமார் குற்றவாளி என்றும், அவருக்கான தண்டனை விவரங்கள் நாளை (24/05/2022) அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

 

விஸ்மயா தற்கொலை வழக்கில் அவரது கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று சட்டவல்லுனர்கள் கூறுகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்