தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலகளவில் ஒரு நாள் கரோனா நோய்த் தொற்று பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 93,249 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,24,85,509 ஆக அதிகரித்துள்ளது. இதில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,16,29,289 ஆக உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,64,623 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று (04/04/2021) காணொளி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர், மத்திய அமைச்சரவை செயலாளர் மற்றும் சுகாதார செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
கூட்டத்தில் கரோனா தொற்றின் தீவிரம், கரோனா தடுப்பூசிப் பணிகளை விரைவுப்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.