கேரளாவிலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி தங்கக் கடத்தல் நடந்த விவகாரம் கடந்த ஆண்டு கேரளாவை உலுக்கியது. தூதரகத்தில் பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ், ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கினை தேசியப் புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை, சுங்கத்துறை உள்ளிட்ட 3 தரப்பும் விசாரித்துவருகின்றன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை அணுகிவருகின்றனர். கடந்த பிப்ரவரியில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவசங்கருக்கு ஜாமீன் கிடைத்தது. ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டவர்கள் ஓராண்டாக சிறையில் இருக்கின்றனர். அமலாக்கம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்த வழக்கில் ஸ்வப்னாவுக்கு ஏற்கனவே ஜாமீன் கிடைத்துள்ளது. ஆனால், என்.ஐ.ஏ. எனப்படும் தேசியப் புலனாய்வு அமைப்பு தொடந்த வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டே வருகிறது.
இந்த நிலையில், ஜாமின் வழங்கக் கோரி மீண்டும் கேரள உயர் நீதிமன்றத்தை நேற்று (16.07.2021) அணுகினார் ஸ்வப்னா. ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த அவரது மனுவில், "என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடிவே இல்லாமல் நீடிக்கிறது. விசாரணை என்ற பெயரில் ஒரு வருடமாக சிறையில் இருக்கிறேன். இதே தங்கக் கடத்தல் வழக்குடன் தொடர்புடைய சுங்கத்துறை மற்றும் பணமோசடி வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே என்.ஐ.ஏ. தொடர்ந்த வழக்கிலும் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கு விசாரணையின்போது என்.ஐ.ஏ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சரித், ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் மிக முக்கியமானவர்கள். கடத்தலின் மூளையாக செயல்பட்டுள்ளனர். இந்தியாவுக்கும் இவர்களின் தங்கக் கடத்தல்களால் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை நாங்கள் நிரூபித்துள்ளோம். கூட்டுச் சதியிலும் இவர்களுக்குத் தொடர்பிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 2019 நவம்பர் முதல் 2020 ஜூன் வரை 167 கிலோ தங்கத்தைக் கடத்தியுள்ளனர்.
பணப்பரிவர்த்தனைகள் மற்றும் கடத்தல் தொடர்பான ஆதாரங்களைப் பெறுவதற்காக பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இந்த நிலையில், இவர்களை ஜாமீனில் விடுவிப்பது விசாரணையைத் தீவிரமாக பாதிக்கும். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரிய இடங்களில் ஸ்வப்னாவுக்கு தொடர்புகள் உள்ளன. ஆதாரங்களை அழிக்கவும், சாட்சியங்களைக் கலைக்கவும் வாய்ப்புண்டு. அதனால் ஜாமீன் வழங்கக் கூடாது” என்று கடுமையாக எதிர்த்தனர். இதனையடுத்து ஜாமீன் வழங்க மறுத்ததுடன், வழக்கை ஜூலை 29க்கு ஒத்திவைத்துள்ளது கேரள உயர் நீதிமன்றம்.