அசாமில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் போது ஏற்பட்ட வன்முறையில், இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் டர்ங் மாவட்டத்தில் உள்ள டோல்பூர் பகுதியில் அரசுக்குச் சொந்தமான 602.04 ஹெக்டேர் நிலம் உள்ளது. இதில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். இதற்கிடையே இந்த இடத்தில் அரசின் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் ஹிமந்த் பிஸ்வா கடந்த சில வாரங்களுக்கு முன் அந்த இடத்தை பார்த்துவிட்டுச் சென்றார். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த இடத்தை காலி செய்ய வலியுறுத்தி அங்கிருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், சில நாட்களாக வாகனங்களைக் கொண்டு வந்து அதிகாரிகள், ஆக்கிரமிப்புக்களை அகற்றத்தொடங்கினார்கள். இதில் பயந்த சில குடும்பத்தினர், அங்கிருந்து கிளம்பி வேறு இடத்திற்குச் சென்றனர். இந்நிலையில், தங்களுக்கு மாற்று இடம் வேண்டும், நிவாரணம் தர வேண்டும் எனக் கூறி அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களில் சிலர் போராட்டத்தில் குதித்தனர். காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியும் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில், அது தற்போது வன்முறையில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் பலியானார்கள். இருந்தும், ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.