இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் தயாரித்த விக்ரம்-எஸ் ராக்கெட் இஸ்ரோ நிறுவனத்தால் இன்று (18/11/2022) காலை 11.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. இரண்டு இந்தியச் செயற்கைக் கோள்கள் உள்பட மூன்று செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்துள்ளது.
விக்ரம்-எஸ் ராக்கெட் 7 டன் உந்து சக்தியைக் கொண்டது. அதிகபட்சம் 480 கிலோ எடையைச் சுமந்து செல்லக் கூடியது. மூன்று செயற்கைக் கோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் நிறுத்தப்பட்டு ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளன. ஒரே நிலையைக் கொண்ட விக்ரம்-எஸ் ராக்கெட் 545 கிலோ எடையும் 6 மீட்டர் உயரமும் 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது.
இந்தியாவில் தயாரான முதல் தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது இஸ்ரோ நிறுவனத்தின் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்த ராக்கெட்டுக்கு விண்வெளித்துறையின் தந்தை விக்ரம் சாராபாய் பெயரை சுருக்கி விக்ரம்-எஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.