திரிபுரா மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை வெட்டுவதற்கு தடை விதித்து அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த மாநிலத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாதா திரிபுரேஸ்வரி கோவிலில் உள்ள சக்தி மடத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு ஆடு பலியிடப்படுவது வழக்கம். இதற்கான நிதியை மாநில அரசு அளித்து வருகிறது. இதனை எதிர்த்து சுபாஷ் பட்டாச்சார்ஜி என்ற வழக்கறிஞர், திரிபுரா உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் கரோல் மற்றும் நீதிபதி அரிந்தம் லோத் ஆகியோர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது கோயிலில் விலங்குகளை பலியிடும் நடைமுறை சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தொடர்ந்து வருகிறது. அந்த நடைமுறையை தற்போது நிறுத்தக்கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர் தரப்பில் இந்து உணர்வை புண்படுத்தும் வகையில் தினந்தோறும் ஆடு பலி கொடுப்பது அமைந்திருப்பதாக வாதிட்டார்.
இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுபோன்ற செயல்களுக்கு அரசு பணம் கொடுக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை. இது போன்ற செயல்களை அரசு தடுக்க வேண்டுமே தவிர உயிர் பலி கொடுக்க அனுமதி அளிக்கக்கூடாது. இனி திரிபுரா மாநிலத்தில் எந்த இந்து கோவில்களிலும் ஆடு, கோழி விலங்குகளை பலியிட தடை விதிக்கிறோம்.
ஆடு மற்றும் கோழி கோவில்களுக்கு தத்துக்கொடுக்கலாமே தவிர, பலியிட அனுமதியில்லை. இந்த உத்தரவை மாநில அரசு கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். மேலும் கோயில்களில் சிசிடிவி கேமரா வைத்து இதை கண்காணிக்க வேண்டும் என்றும், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இந்த நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.