தனது மகனை கண்டுபிடித்து சுட்டுக்கொல்ல வேண்டும் என உ.பி ரவுடி விகாஸ் தூபேவின் தயார் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், கான்பூர் மாவட்டத்தின் சவுபேபூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட திக்ரு கிராமத்தில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி விகாஸ் துபே பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. கொலை, கொள்ளை என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள விகாஸ் துபே என்ற அந்த ரவுடியைப் பிடிக்க, வெள்ளிக்கிழமை நள்ளிரவு காவல்துறையின் ஒரு குழு அந்த கிராமத்திற்கு சென்றது. அப்போது ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸார் 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், விகாஸ் துபேவைப் பிடிக்க 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள விகாஸ் தூபேவின் தயார், "அப்பாவி போலீஸாரை கொன்று எனது மகன் கொடூரச் செயலை செய்திருக்கிறான். நான் அந்த சம்பவம் தொடர்பாக தொலைக்காட்சியில் செய்தி பார்த்தேன். போலீஸார் எனது மகனை தேடிக் கண்டுபிடித்து, துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல வேண்டும், அவனுக்குக் கண்டிப்பாகத் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். நான் எனது இரண்டாவது மகன் வீட்டில் வசித்து வருகிறேன். விகாஸ் துபேவால் நாங்கள் இன்னமும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். என் மகனுக்கு அரசியல்வாதிகளின் தொடர்பு வந்த பிறகே குற்றச்செயல்களில் ஈடுபடத் தொடங்கினான்" என தெரிவித்துள்ளார்.