கர்நாடக - கேரள எல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை, பெரிதும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், இதனை ஒடுக்கும் நடவடிக்கையாக, போதைப் பொருள் தடுப்பு வேட்டையில், போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால், அந்தந்த காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு, போதைப் பொருள் விற்பவர்களை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்
இத்தகைய சூழலில், கடந்த 10 ஆம் தேதியன்று கர்நாடக மாநிலம் மைசூருக்கு அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு இளைஞர்கள் சிலர் தங்களுடைய தோழிகளுடன் வந்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த அவர்கள் அங்குள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், குடி மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இவர்கள், ஆண், பெண் எனத் தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி போதையில் தத்தளித்து வந்தனர். அந்த வகையில், மைசூருக்கு அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு வந்த நண்பர்கள் அனைவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, அவர்கள் கஞ்சா போதையிலும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அவர்களுக்குப் போதை தலைக்கேறியதால் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் அங்கும் இங்குமாய் தள்ளாடிக் கொண்டிருந்தனர். அந்த சமயம், அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த ஊர்மக்கள் இவர்களுடைய அலப்பறைகளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இதைக் கேட்ட ஒருவரை அந்த இளைஞர்கள் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு, உடனடியாக ஊர்மக்களை அழைத்து வந்து அங்கு போதையில் இருந்த இளைஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனிடையே, அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் போதையில் இருந்த இளைஞர்களையும் இளம்பெண்களையும் வீடியோ எடுத்துள்ளார். அப்போது, அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொண்டு அங்கிருந்து ஓட முயற்சித்தனர். ஆனால், அதிலிருந்த ஒரு இளம்பெண், தன்னால் எழுந்திருக்கக் கூட முடியாமல் அந்த வயல்வெளியிலேயே உருண்டு புரண்டார். அந்த சமயம், இளம்பெண்ணுடன் இருந்த சக நண்பர்கள் அந்த பெண்ணை அங்கிருந்து தூக்கிக்கொண்டு சென்றனர். ஒருகணம், இதைப் பார்த்து விழி பிதுங்கிய கிராம மக்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போனார்கள்.
போதைப் பழக்கத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இத்தகைய செயலில் ஈடுபடுவது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து, போதை தலைக்கேறிய அந்த கோஷ்டிகளை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து விரட்டியடித்தனர். தற்போது, விவசாய நிலத்தில் இளைஞர்கள் சிலர் தங்களுடைய தோழிகளுடன் போதையில் திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.